நாள் 9 - பரிசுத்தமான தேர்வுகள்

ஆடியோ

உபாகமம் 30:19 “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,”

வேதாகமம் முழுவதும், தேவன் தம்முடைய மக்களுக்கு மீண்டும் மீண்டும் ஒரு தேர்வை முன்வைக்கிறார்: ஜீவனா அல்லது மரணமா? நன்மையா அல்லது தீமையா? வெளிச்சமா அல்லது இருளா? குறுகிய வழியா அல்லது அகலமான வழியா? இயேசுவும், “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்” என்று கூறினார் (மத்தேயு 7:13–14). நம்முடைய தேர்வுகள் முக்கியமானவை என்பதை வேதாகமம் தெளிவாகக் காட்டுகிறது.

தேவன் நம்மைத் தேர்வு செய்யும் திறனுடன் படைத்திருக்கிறார். அவர் நம்மைத் தமக்குக் கீழ்ப்படியுமாறு நிரல் செய்யப்பட்ட (programmed) ரோபோக்களாகப் படைக்கவில்லை. அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நேசிக்கவும், அவரை நம்பவும், விருப்பத்துடன் அவருக்குக் கீழ்ப்படியவும் அவர் நமக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் சுதந்திரம் பொறுப்புகளை நீக்கிவிடுவதில்லை. ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு திசை இருக்கிறது. நாம் மீண்டும் மீண்டும் எடுக்கும் தேர்வுகளின் திசை, மெதுவாக நம்முடைய வாழ்க்கையின் திசையையும் வடிவமைக்கிறது.

ஒவ்வொரு நாளும் நாம் பல தேர்வுகளைச் செய்கிறோம். நாம் எதை நம்புகிறோம், யாருடைய பேச்சைக் கேட்கிறோம், யாருடைய தாக்கத்தை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறோம், எதைத் தேடுகிறோம், எவற்றை விட்டு விலகுகிறோம், தேவனுடைய வார்த்தை நமக்கு சவாலாக இருக்கும்போது அவருக்குக் கீழ்ப்படிகிறோமா என்பதெல்லாம் தேர்வுகளே. சில நேரங்களில் எளிதானது, வசதியானது அல்லது நமக்கு அதிகம் பிடித்ததை அடிப்படையாகக் கொண்டு நாம் தேர்வு செய்கிறோம். ஆனால் பரிசுத்தமான தேர்வு என்பது வெறுமனே: “எனக்கு என்ன வேண்டும்?” என்பது அல்ல. மாறாக, “தேவனுக்கு என்ன வேண்டும்?” என்பதே. மிகவும் முக்கியமான தேர்வுகள் எப்போதும் பெரிய அல்லது விறுவிறுப்பான தேர்வுகளாக இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் நாம் மீண்டும் மீண்டும் செய்யும் சிறிய தேர்வுகள், நம்முடைய இருதயத்தை தேவனை நோக்கியும் அல்லது தேவனிடமிருந்து விலகியும் மெதுவாக நகர்த்தலாம். இறுதியில், நம்முடைய தேர்வுகளுக்கு நித்திய முக்கியத்துவம் உள்ளது.

தேவனுடைய அழைப்பு தெளிவாக இருக்கிறது: “ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்.” அவர் நம்மை வற்புறுத்துவதில்லை. அவரைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும்படி நம்மை அழைக்கிறார்.

சிந்தனை:

  • இன்று நான் எடுக்கும் எந்தத் தேர்வுகள் என் வாழ்க்கையின் திசையை வடிவமைக்கின்றன?

  • தேவனுடைய சித்தமும் என்னுடைய விருப்பமும் வேறுபடும்போது, நான் எதைத் தேர்ந்தெடுக்கிறேன்?

நடைமுறை:

முக்கியமான ஒரு தேர்வை எடுப்பதற்கு முன், சிறிது நேரம் நின்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: “இந்தத் தேர்வு என்னை தேவனிடம் நெருக்கமாகக் கொண்டுசெல்கிறதா அல்லது அவரிடமிருந்து என்னைத் தூரமாக்குகிறதா?”. வசதியை விட தேவனுடைய சத்தியத்தையும், தனிப்பட்ட விருப்பத்தை விட கீழ்ப்படிதலையும், அவரை நோக்கி வழிநடத்தும் பாதையையும் தேர்ந்தெடுங்கள்.

அக்டோபர்

நாள் 9