நாள் 17 - பரிசுத்தமான அடையாளம்

ஆடியோ

உபாகமம் 7:6 “நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் தெரிந்துகொண்டார்”

நம் ஒவ்வொருவருக்கும் நமக்கு மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதும் சில பொருட்கள் இருக்கும்—குடும்பப் புகைப்படம், நாம் நேசிக்கும் ஒருவரிடமிருந்து கிடைத்த பரிசு, அல்லது பல ஆண்டுகளாக நாம் பாதுகாத்து வைத்திருக்கும் ஏதாவது ஒரு பொருள். அது நமக்கு மதிப்புமிக்கது என்பதால், அதை மற்ற பொருட்களிலிருந்து வித்தியாசமாக நடத்துகிறோம். வேதாகமம் நாம் தேவனுடைய சிறப்பான பொக்கிஷம் என்று கூறுகிறது. நாம் அவருக்குச் சொந்தமானவர்கள். தேவனை அறிந்து, அவரோடு நடந்து, நம்முடைய ஆழமான அடையாளத்தை அவரில் கண்டடையும்படியாகவே தேவன் நம்மைப் படைத்தார். ஆனால் பாவத்தின் காரணமாக, மனிதகுலம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டது. தேவனோடு உறவுக்காகப் படைக்கப்பட்ட நாம், நம்முடைய சிருஷ்டிகரிடமிருந்து துண்டிக்கப்பட்டோம். ஆனாலும் தேவன் நம்மை அந்த நிலையிலேயே விட்டுவிடவில்லை. இயேசுவின் மூலம் நம்மை மீண்டும் தம்மிடத்தில் கொண்டு வந்து, நம்மைத் தமக்குச் சொந்தமானவர்களாக ஆக்கினார்.

நம்முடைய இருதயத்தில் தேவனுக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தை மனிதர்கள், சாதனைகள், பொருட்கள், அங்கீகாரம் அல்லது ஊழியம் போன்றவற்றால் நிரப்ப முயற்சிக்கும்போது, ஏதோ ஒன்று எப்போதும் குறைவாகவே இருக்கும். நாம் கடினமாக உழைத்து ஒரு காரியத்தை சாதித்து, சிறிது காலம் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் அந்த திருப்தி நாளடைவில் குறைந்துவிடுகிறது. ஒருவருடைய அங்கீகாரத்தைப் பெறலாம்; ஆனால் விரைவிலேயே மீண்டும் அந்த அங்கீகாரம் நமக்குத் தேவைப்படுகிறது. இன்னும் அதிகமாகப் பெறலாம், இன்னும் அதிகமாக சாதிக்கலாம், இன்னும் வெற்றியடையலாம்; ஆனாலும் எதனாலும் விளக்க முடியாத ஒரு வெறுமை நமக்குள் இருக்கலாம்.

ஏன்? ஏனென்றால் நாம் தேவனுக்காகவே படைக்கப்பட்டோம்.

தேவனுக்காக வடிவமைக்கப்பட்ட அந்த இடத்தை தேவனால் மட்டுமே நிரப்ப முடியும். நாம் சோர்வடைந்திருக்கும்போது, அவர் தரும் ஊக்கம் நம்முடைய மனச்சோர்வான இடங்களைத் தொடுகிறது. நாம் வேதனையில் இருக்கும்போது, அவருடைய ஆறுதல் நம்மைத் தேற்றுகிறது. என்ன செய்வதென்று தெரியாதபோது, அவருடைய ஞானம் நம்மை வழிநடத்துகிறது. நாம் பலவீனமாக உணரும்போது, அவருடைய பெலன் நம்மைத் தாங்குகிறது. நாம் தனிமையாக உணரும்போது, அவருடைய பிரசன்னம் நமக்கு உறுதியளிக்கிறது. நம்மை முழுமையாக்க வேறு ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நாம் தேவனுடைய சிறப்பான பொக்கிஷம். அவருக்குச் சொந்தமானவர்களாக இருப்பதில்தான் நம்முடைய ஆழமான நிறைவு காணப்படுகிறது.

நடைமுறை:

இன்று, தேவன் மட்டுமே கொடுக்கக்கூடிய திருப்தி, பாதுகாப்பு அல்லது மதிப்பை நீங்கள் எதிலிருந்து பெற முயற்சிக்கிறீர்கள் என்பதை அடையாளம் காணுங்கள். “நான் முழுமையாக உணர இன்னும் என்ன தேவை?” என்று கேட்பதற்குப் பதிலாக, “தேவனுக்குச் சொந்தமான என் இருதயத்தின் இடத்தை அவர் நிரப்ப நான் அனுமதிக்கிறேனா?” என்று கேளுங்கள். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்ததற்காகவும், மீட்டெடுத்ததற்காகவும், தமக்குச் சொந்தமானவராக ஆக்கியதற்காகவும் சிறிது நேரம் அமைதியாக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

சிந்தனை:

  • என்னை மதிப்புமிக்கவராகவும், முழுமையானவராகவும் உணரச் செய்வதற்காக நான் எதைச் சார்ந்திருக்கிறேன்?

  • என்னுடைய சாதனைகள், உறவுகள் அல்லது பொறுப்புகள் தேவனுக்குச் சொந்தமான இடத்தை எடுத்துக்கொண்டுள்ளனவா?

  • நான் உண்மையாகவே தேவனுடைய சிறப்பான பொக்கிஷம் என்பதில் என் அடையாளத்தைக் காண்கிறேனா?

“நான் அவருக்குச் சொந்தமானவன். அவர் போதுமானவர். அவருடைய இடத்தை வேறு எதுவும் எடுத்துக்கொள்ள முடியாது.”

அக்டோபர்

நாள் 17