நாள் 22 - காத்திருப்பதிலும் பரிசுத்தம்

ஆடியோ

சங்கீதம் 37:7 “கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே”

காத்திருப்பு என்பது நம் இதயங்கள் மிக எளிதாக வெளிப்படும் தருணங்களில் ஒன்றாகும். எல்லாமே நம்முடைய திட்டத்தின்படி நடக்கும்போது பொறுமையாக இருப்பது எளிது. ஆனால் ஒரு பதில் தாமதமாகும்போது, ஒருவர் நம்மை ஏமாற்றும்போது, ஒரு ஜெபத்திற்கு பதில் கிடைக்காதது போல் தோன்றும்போது, அல்லது சூழ்நிலைகள் தொடர்ந்து தெளிவில்லாமல் இருக்கும்போது, நாம் அமைதியிழந்து, உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் சில நேரங்களில் பரிசுத்தம் என்பது எல்லாவற்றையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராமல் காத்திருப்பதாகும். தேவனுக்கு முன்பாக அமைதியாக இருப்பது எதுவும் செய்யாமல் இருப்பது என்று அர்த்தமல்ல. அதற்கு பதிலாக, பதற்றம், விரக்தி அல்லது பொறுமையின்மை நமக்காக முடிவுகளை எடுக்க அனுமதிக்காமல் இருப்பதாகும். அவர் நம்மைச் சுற்றிச் செயல்படுவதற்காக நாம் காத்திருக்கும் அதே வேளையில், நமக்குள் அவர் செயல்படுவதற்கான இடத்தையும் அக்காத்திருப்பு அவருக்கு அளிக்கிறது.

கடினமான ஒரு தருணத்தில் நாம் எவ்வளவு அடிக்கடி உடனடியாகப் பதிலளிக்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்: ஒரு குறுஞ்செய்தியை அனுப்புகிறோம். ஒரு தொலைபேசி அழைப்பைச் செய்கிறோம். கோபமான வார்த்தைகளைப் பேசுகிறோம். ஒரு முடிவை எடுத்துவிடுகிறோம். அல்லது மிகவும் மோசமானதையே நடக்கும் என்று நினைத்துவிடுகிறோம். பின்னர், நம்முடைய உணர்வுகள் அமைதியான பிறகு, “நான் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம்” என்று சில நேரங்களில் நினைக்கிறோம். இதற்காக நாம் ஒரு எளிய பயிற்சியை உருவாக்கிக்கொள்ளலாம்:

நிறுத்துங்கள் - உடனடியாகப் பதிலளிக்காதீர்கள். பேசுவதற்கு அல்லது முடிவெடுப்பதற்கு முன் சில நொடிகள் உங்களுக்கே கொடுங்கள்.

நிதானமாக மூச்சை இழுத்து விடுங்கள் - ஆழமாக ஒரு மூச்சை எடுத்துக்கொண்டு, “தேவன் இங்கே இருக்கிறார்.” என்று உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

ஜெபியுங்கள் - அமைதியாக இவ்வாறு சொல்லுங்கள்: “ஆண்டவரே, எனக்கு சமாதானத்தையும் ஞானத்தையும் தாரும். உம்முடைய சித்தத்தின்படி பதிலளிக்க எனக்கு உதவும்.” அந்தச் சிறிய இடைநிறுத்தமே ஒரு பரிசுத்தமான தருணமாக மாறலாம்.

நம்முடைய உணர்வுகள் நம்முடைய பதிலை கட்டுப்படுத்த அனுமதிப்பதற்குப் பதிலாக, அந்தச் சூழ்நிலைக்குள் தேவனை அழைக்கிறோம். காத்திருப்பது என்பது மற்றவர்களிடம் நாம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளையும் தேவனிடம் ஒப்படைக்கக் கற்றுக்கொள்வதாகும். ஒருவர் நம்மை ஏமாற்றும்போது அல்லது நாம் எதிர்பார்த்ததைவிட ஒரு காரியம் தாமதமாகும்போது, அதன் முடிவை நாம் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. தேவன் நம்முடைய கால அட்டவணையின்படி செயல்படவில்லை என்பதற்காக, அவர் தாமதமாகச் செயல்படுகிறார் என்று அர்த்தமல்ல. மேலும், காத்திருக்கும் காலம் வீணான காலமல்ல. காத்திருக்கும் காலத்தை தேவன் பயன்படுத்தி: பொறுமையை வளர்க்கலாம். நம்முடைய நம்பிக்கையை ஆழப்படுத்தலாம். எல்லாவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நம்முடைய தேவையை வெளிப்படுத்தலாம். சூழ்நிலைகளைவிட தேவனைச் சார்ந்திருக்க நமக்குக் கற்றுக்கொடுக்கலாம்.

நடைமுறை:

ஒவ்வொரு காலையிலும் இந்த எளிய ஜெபத்துடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்: “ஆண்டவரே, இன்று ஏதாவது என்னை விரக்தியடையச் செய்யும்போது, தாமதப்படுத்தும்போது அல்லது ஏமாற்றமடையச் செய்யும்போது, அவசரமாகப் பதிலளிக்காமல் இருக்க எனக்கு உதவும். நான் நின்று, ஜெபித்து, உமக்காகக் காத்திருக்க எனக்குக் கற்றுக்கொடும்.” ஒரு மனஅழுத்தமான சூழ்நிலை வரும்போது, பதிலளிப்பதற்கு முன் சிறிது நேரம் நின்று நிதானியுங்கள். நீங்கள் நின்று காத்திருக்கும் அந்த இடமே, தேவன் உங்களுக்கு பரிசுத்தத்தை கற்றுக்கொடுக்கும் இடமாக இருக்கலாம்.

சிந்தனை:

நான் பொறுமையின்றி கட்டுப்படுத்த முயற்சிக்கும் எந்தக் காரியத்தை மீண்டும் தேவனுடைய கைகளில் ஒப்படைக்க வேண்டும்?

அக்டோபர்

நாள் 22